அப்பர் பவானி மின்திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல்
அப்பர் பவானி மின்திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல்
ADDED : ஆக 08, 2024 01:16 AM

சென்னை:கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால், நீலகிரி குந்தா மலை பகுதியில், மின் வாரியத்தின், 1,000 மெகாவாட் நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்து வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா மலை பகுதியில், மின்வாரியத்திற்கு, 833 மெகாவாட் திறனில், 12 நீர்மின் நிலையங்கள் உள்ளன.
ஒப்புதல்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அந்த மின் நிலையங்களுக்கு அருகில் அணைகள் உள்ளன. அவற்றில், மழை சீசனில் தண்ணீர் தேக்கப்படுகிறது.
அந்த தண்ணீரை பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திய தண்ணீரை, மீண்டும் பயன்படுத்த முடியாது.
நீலகிரி ஊட்டியில் இருந்து, 60 கி.மீ., அடர்ந்த வனப்பகுதிக்குள், 'அப்பர் பவானி' அணை உள்ளது. இது, மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மத்திய அரசின் என்.டி.பி.சி., எனப்படும் தேசிய அனல்மின் கழகத்துடன் இணைந்து, 1,000 மெகாவாட் திறனில், அப்பர் பவானி நீரேற்று மின் நிலையம் அமைக்க, மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு, தமிழக அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
நீரேற்று மின் நிலையத்தில் ஒருமுறை மின் உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீர், அதிக திறன் மோட்டார் பம்ப் வாயிலாக மீண்டும் அணைக்கு எடுத்து வர முடியும்.
அந்த தண்ணீரை பயன்படுத்தி, எப்போது வேண்டுமானாலும் மின் உற்பத்தி செய்யலாம்.
கேரள மாநிலம், வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில், மேற்கு தொடர்ச்சி மலையில் சூழல் உணர்திறன் பகுதிகள் குறித்த வரைவு அறிவிக்கையை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சிக்கல்
அதில், வயநாடு உள்ளிட்ட பகுதகளில் கட்டுமான பணி தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில பகுதிகள், உணர்திறன் பகுதிகளாக வருகின்றன. அதன் அருகில்தான், அப்பர் பவானியும் உள்ளது. இதனால், அப்பர் பவானி நீரேற்று மின் திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.