பா.ஜ., நோக்கத்தை முறியடிக்க மக்களை திரட்டி போராட்டம் * முதல்வர் ஸ்டாலின் கடிதம்
பா.ஜ., நோக்கத்தை முறியடிக்க மக்களை திரட்டி போராட்டம் * முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : மார் 07, 2025 08:58 PM
சென்னை:'மாநில உரிமைக் குரலை நசுக்க நினைக்கும் பா.ஜ., நோக்கத்தை முறியடிக்க, மக்கள் திரள் போராட்டங்களை, தி.மு.க., முன்னெடுக்கும்' என, தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம்:
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என, தமிழகம் பிடிவாதமாக இல்லை. தன் மொழிக் கொள்கை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறது. மத்திய அரசுதான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழகத்திற்கு கல்வி நிதியைத் தர மாட்டோம் என, வீண் பிடிவாதம் பிடிக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தை மதித்து, தி.மு.க., அரசு நடக்கிறது. மத்திய அரசு, அந்த அரசியல் சட்டத்தையே சிதைக்கிற வேலையை செய்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள தி.மு.க.,வினர், கன்னடம், மராத்தி, ஹிந்தி, வங்காளம் என, அந்தந்த மாநிலங்களுக்குரிய மொழிகளையும், அங்கே பயன்படுத்தப்படும் மொழிகளையும் அறிந்திருக்கின்றனர்.
தி.மு.க., எந்த மொழிக்கும் எதிரியல்ல; வலிந்து திணிக்கப்படும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைய வேண்டுமென்றால், ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்த்து நிற்போம். தாய்மொழியைக் காத்திடும் அந்த அறப்போரில் வன்முறை தவிர்ப்போம்.
உரிமைகளை நிலைநிறுத்திடும் வகையில், மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்ற நிலையை அடைய பாடுபடுவோம். மாநில உரிமைக் குரலை நசுக்க நினைக்கும் பா.ஜ., நோக்கத்தை முறியடிக்கும் வகையில், மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அதையும் திமு.க., முன்னெடுக்கும்.
அதில் அரசியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும்.
லோக்சபா தொகுதிக் குறைப்பு, ஆதிக்க மொழித் திணிப்பு எனும் இரண்டு அபாயங்களை ஒருசேர செயல்படுத்தி, மாநில உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அறவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும், அதில் நான் முதல் ஆளாக நிற்பேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.