புதுச்சேரி பட்ஜெட் கூட்ட தொடர் கவர்னர் உரையுடன் துவக்கம் தி.மு.க., - காங்., வெளிநடப்பு
புதுச்சேரி பட்ஜெட் கூட்ட தொடர் கவர்னர் உரையுடன் துவக்கம் தி.மு.க., - காங்., வெளிநடப்பு
ADDED : ஆக 01, 2024 05:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின்பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது. தி.மு.க.,- காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. உரை நிகழ்த்த சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு, போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து கவர்னரை சட்டசபையின் மைய மண்டபத்திற்கு அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார்.தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்வுகள் துவங்கின.
பின், கவர்னர் ராதாகிருஷ்ணன் உரையாற்ற துவங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்கள், 'மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது' எனக்கூறி, வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய கவர்னர், 'புதுச்சேரி அரசு துறைகளில் 1,119 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த நிதியில் 93.87 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.55 சதவீதம் அதிகம். தனி நபர் வருமானம் ரூ.2.63 லட்சமாக உயர்ந்துள்ளது' என்றார்.
காலை 10:50 மணிக்கு தனது உரையை கவர்னர் நிறைவு செய்தார்.73 நிமிடங்கள் கவர்னர் உரையாற்றினார். பின், சபை ஒத்தி வைக்கப்பட்டது.
நாளை 2ம் தேதி, நிதி துறை பொறுப்பு வசிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.