புதுக்கோட்டை, தி.மலை, காரைக்குடி, நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு
புதுக்கோட்டை, தி.மலை, காரைக்குடி, நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயர்வு
ADDED : ஜூன் 29, 2024 06:29 AM

சென்னை: நகராட்சிகளை தரம் உயர்த்துவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி, நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் 1998ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, மூன்று லட்சத்திற்கு குறையாத மக்கள் தொகை; 30 கோடி ரூபாய்க்கு குறையாத ஆண்டு வருமானம் உள்ள நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முடியும்.
அதற்கு குறைவான மக்கள் தொகை மற்றும் வருமானம் கொண்ட பல மாவட்ட தலைமையிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள், ஆன்மிக சுற்றுலா நகரங்களில் திட மற்றும் நீர்மக் கழிவுகளை வெளியேற்றும் வசதி உட்பட, ஒரு மேம்பாட்டு உள்கட்டமைப்பு வசதி தேவைப்படுகிறது.
எனவே, அத்தகைய உள்ளாட்சியை தேவைக்கேற்ப பேரூராட்சியாக, நகராட்சியாக, மாநகராட்சியாக அறிவிப்பது அவசியம். இதற்கு ஏற்கனவே உள்ள மக்கள் தொகை, வருமான அளவுகோல் தடையாக உள்ளது.
எனவே, அந்த விதிமுறைகளில் திருத்தம் செய்து, தேவையான நகரங்களை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த்துவதற்காக, 2024ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டத்தை, அமைச்சர் கே.என்.நேரு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இந்த சட்ட மசோதாவின்படி, மூன்று லட்சம் மக்கள் தொகை, இரண்டு லட்சமாக, 30 கோடி ரூபாய் வருமானம், 20 கோடி ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், தேவைக்கேற்ப எந்த உள்ளாட்சி பகுதியையும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியாக உருவாக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்ட திருத்தத்தின்படி, புதுக்கோட்டை நகராட்சியுடன், 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும்; திருவண்ணாமலை நகராட்சியுடன், 18 ஊராட்சிகளை இணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியாகவும் மாற்றப்படும்.
மேலும், நாமக்கல் நகராட்சியுடன், 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சியாகவும்; காரைக்குடி நகராட்சியுடன் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும் உருவாக்கப்பட உள்ளது.
இதன் வாயிலாக, மாநகராட்சிகள் எண்ணிக்கை 25 ஆக உயரும். அதேபோல் 2024ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டாம் திருத்த சட்ட மசோதாவை, அமைச்சர் நேரு தாக்கல் செய்துள்ளார். இந்த சட்டத்தின்படி, நகராட்சி என்ற சொற்றொடர், நகராட்சி மன்றம் என இனி மாற்றி அமைக்கப்படும்.