போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலுக்கு கியூ பிரிவு வலை
போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலுக்கு கியூ பிரிவு வலை
ADDED : மார் 01, 2025 01:42 AM
சென்னை: தடை செய்யப்பட்ட இயக்கத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்ப, சென்னை குன்றத்துார், மாங்காடு மற்றும் மதுர வாயல் பகுதியில் பதுங்கியுள்ள போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலை, 'கியூ' பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 65. இவர், 1982ல் அகதியாக தமிழகம் வந்தார். சென்னை மதுரவாயலில் தங்கி இருந்த கிருஷ்ணமூர்த்தி, சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விடுதலை புலிகளை அனுப்பும் பணியில் ஈடுபட்டார். அதற்காக, போலி பாஸ்போர்ட்களையும் தயாரித்து தந்துள்ளார்.
இவருக்கு உதவியாக, சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஜெயசேகரன், அபுபக்கர் சித்திக், சிவரங்கன், தேவசகாயம் பேட்ரிக் ஸ்ரீதர் ஆகியோர் செயல்பட்டனர்.
இவர்கள் ஒரு இடத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கி இருக்க மாட்டார்கள். அத்துடன், பல முறை கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த, 2014ல், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போதே, 'என்னை போல ஆயிரம் கிருஷ்ணமூர்த்திகள் உருவாகுவர்' என, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
தற்போது, கிருஷ்ணமூர்த்தியால் தொழில் ரீதியாக வளர்க்கப்பட்ட நபர்கள், சென்னை மாங்காடு, மதுரவாயல் மற்றும் குன்றத்துார் பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்ப, காலாவதியான இந்திய பாஸ்போர்ட்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நபர்களின் பாஸ்போர்ட்டுகளை வாங்கி இருப்பதாகவும் தெரிய வருகிறது.
அதன் அடிப்படையில், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலை தேடும் பணி நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.