குவாரி வெடிமருந்து கிடங்கு விபத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
குவாரி வெடிமருந்து கிடங்கு விபத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
ADDED : மே 11, 2024 09:17 PM
சென்னை:விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி கல் குவாரியில் உள்ள வெடிமருந்து கிடங்கு விபத்தில், மூன்று பேர் பலியானது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே கீழஉப்பிலிகுண்டு கிராமத்தில், தனியார் கல்குவாரியில் உள்ள வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியதில், அங்கு பணியாற்றிய மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தால் அருகில் உள்ள வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நிபுணர்குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கல் குவாரி வெடிமருந்து சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 200 மீட்டர் தொலைவுக்கு இந்த விபத்தின் தாக்கம் இருந்துள்ளது. அருகில் உள்ள வீடுகளும் சேதமடைந்துள்ளன.
முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், அளவுக்கு அதிகமாக வெடிமருந்து சேமித்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச சாதனங்கள் இல்லை என்றும், கல் குவாரி உரிமையாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விதிமீறல்களை காவல் துறை கண்டுகொள்ளாததால் தான், இதுபோன்ற விபத்து நடப்பதாகக் கூறி, மதுரை - துாத்துக்குடி நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் குவாரியில் கற்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் போது, வீடுகள் அதிரும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் கல் குவாரிக்கு வந்த லாரி, குழந்தைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
எனவே, இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், விருதுநகர் கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இந்த வழக்கு சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வுக்கு மாற்றப்படுகிறது. அங்கு ஜூலை 12ல் வழக்கு விசாரணை நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.