ADDED : மே 11, 2024 08:16 PM
சென்னை,:''நாய், மாடு, குதிரை உள்ளிட்ட எந்த விலங்கினம் கடித்தாலும், 'ரேபிஸ்' நோய் வர வாய்ப்புஉள்ளது. அவை கடித்தால், உடனடியாக தண்ணீரை கொண்டு கடிபட்ட இடத்தை கழுவு வது அவசியம்,'' என, பொது சுகாதாரத்துறையின் சிறப்பு பணி அலுவலரும், இயக்குனருமான வடிவேலன் கூறினார்.
இதுகுறித்து, சிறப்பு பணி அலுவலர் வடிவேலன் கூறியதாவது:
தமிழகத்தில், 'ரேபிஸ்' என்ற வெறிநாய் கடி நோயால், ஆண்டுக்கு 20 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் பாதிக்கப்பட்டால், குணப்படுத்துவதற்கு மருந்து, மாத்திரைகள் இல்லை. இதனால், நோய் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது என்பது இயலாத ஒன்று.
அதேநேரம், ரேபிஸ் நோய் வராமல் பாதுகாக்க முடியும். இந்தியாவை பொறுத்தவரையில், நாய்களிடமிருந்து தான், அதிகளவில் ரேபிஸ் நோய் தொற்று ஏற்படுகிறது.
அதேநேரம், வீட்டில் வளர்க்கப்படும் பூனை, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகள் கடித்தாலும், ரேபிஸ் நோய் பரவும். எனவே, நாய் போன்ற விலங்குகள் கடித்தவுடன், உடனடியாக தண்ணீரை கொண்டு கடித்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். தொடர்ந்து சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
அவ்வாறு செய்த பின், எக்காரணம் கொண்டும், மஞ்சள், காபி துாள், சுண்ணாம்பு போன்றவற்றை தடவக்கூடாது. கடித்த இடத்தை சோப்பு வாயிலாக கழுவினால் மட்டுமே போதும். பின், டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுவது அவசியம். ரேபிஸ் நோய் வராமல் இருக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் நான்கு தவணைகளில் தடுப்பூசி போடுவது அவசியம். பாதிப்பு தன்மைக்கு ஏற்ப, சிகிச்சை முறைகளும் மாறுபடும்.
இந்நோய் ஏற்பட்டவர்களுக்கு தண்ணீர், வெளிச்சம் பார்த்தால் ஒரு பய உணர்வு ஏற்படும். எனவே, இந்நோய் வந்த பின் குணப்படுத்த முடியாது. வராமல் தடுக்க முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.