நாய்களுக்கு பரவும் வெறிநோய்: கட்டுப்படுத்த செயலர் உத்தரவு
நாய்களுக்கு பரவும் வெறிநோய்: கட்டுப்படுத்த செயலர் உத்தரவு
ADDED : மார் 07, 2025 06:12 AM

சென்னை : ''தமிழகத்தில், நாய்களுக்கு பரவி வரும் வெறிநோயை கட்டுப்படுத்த, கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் நல வாரியம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்,'' என, தமிழக கால்நடைத்துறை செயலர் சுப்பையன் தெரிவித்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரியில், 'செல்லப் பிராணிகளுக்கான நவீன சிகிச்சை முறைகள்' தொடர்பாக, மூன்றாவது தேசிய அளவிலான, இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
இதில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன்துறை செயலர் சுப்பையன், கருத்தரங்க மலரை வெளியிட்டு பேசியதாவது:
செல்ல பிராணிகள், நம் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுகின்றன. அவற்றுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மனிதர்களுக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தற்போது, நாய்களுக்கு பரவி வரும் வெறி நோயை கட்டுப்படுத்தவும், செல்லப்பிராணிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கவும், கால்நடை மருத்துவர்கள், தங்கள் பகுதியில் உள்ள விலங்குகள் நல வாரியம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் கூறுகையில், ''இப்பல்கலை பேராசிரியர்கள், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயிற்சி பெற்று, சிறந்த சிகிச்சை வழங்கி வருகின்றனர். ஜெர்மன் நாட்டுடன், கால்நடை மருத்துவத்தில், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது,'' என்றார்.
கருத்தரங்கில், தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலை சிகிச்சையியல் இயக்குனர் அனில் குமார், கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன், துறை பேராசிரியர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.