'எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழிவுபடுத்துகிறார் ராகுல்'; மத்திய அமைச்சர்கள் குற்றச்சாட்டு
'எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழிவுபடுத்துகிறார் ராகுல்'; மத்திய அமைச்சர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 02, 2024 04:00 AM

புதுடில்லி : 'தன் பொறுப்பற்ற பேச்சின் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்., - எம்.பி., ராகுல் இழிவுபடுத்துகிறார்' என மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், “அக்னிபாத் திட்டம், அயோத்தியில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் தொடர்பான விஷயங்களில் ராகுல், பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளார். சொன்ன குற்றச்சாட்டுகளை ராகுல் நிரூபிக்க வேண்டும்; இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறான குற்றச்சாட்டுகளை கூறி அவர் தப்பிக்க முடியாது,” என்றார்.
“முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பா.ஜ., தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் எதிர்க்கட்சித் தலைவர்களாக செயல்படும் போது, பொறுப்பாக இருந்து சபையை வழி நடத்தினர். ஆனால், எந்த பொறுப்புமின்றி அதிகாரத்தை மட்டுமே ராகுல் அனுபவித்து வருகிறார். தன் பொறுப்பற்ற பேச்சின் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் இழிவுபடுத்துகிறார். அவரின் காங்கிரஸ் கட்சி, அரசியலமைப்பு அமைப்புகளை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது,” என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்துள்ளார்.
ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர்கள் பலர், இந்த விவகாரத்தில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்த உள்ளதாக கூறினர்.