துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்னையில் வலம் வரும் ரவுடிகள்: தேடுதல் வேட்டையில் போலீஸ் தீவிரம்
துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்னையில் வலம் வரும் ரவுடிகள்: தேடுதல் வேட்டையில் போலீஸ் தீவிரம்
ADDED : ஜூன் 08, 2024 12:55 AM

சென்ன: சதுப்பு நிலத்தை விற்று கோடிகளை குவிப்பதில் ஏற்பட்ட தொழில் போட்டியில், ரவுடி கோஷ்டிகள் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்ட, துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் வலம் வருவதால், அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையை சேர்ந்தவர் ரவுடி மணிகண்டன்; கடந்த 90களில், சைதாப்பேட்டை பகுதியில் நடைபாதையில், 'சிடி' வியாபாரம் செய்து வந்த இவருக்கு, ரவுடி திண்டுக்கல் பாண்டியின் நட்பு கிடைத்தது.
கொலை செய்தார்
ரவுடியாக உருவெடுத்த பின், சிடி மணி என, அழைக்கப்பட்டார். திண்டுக்கல் பாண்டி, 2009ல், போலீசாரால், 'என்கவுன்டர்' செய்யப்பட்ட பின், அந்த இடத்தை சிடி மணி பிடித்தார். அதற்கு அடுத்தடுத்து தன் கூட்டாளிகளை கொலை செய்தார்.
பெரிய தாதாவாக மாறிய சிடி மணி, தொழில் அதிபர்களை கடத்தி பணம் பறித்தல், நிலம் அபகரிப்பு, போலி ஆவணம் வாயிலாக சதுப்பு நிலத்தை விற்பது என, அட்டூழியம் செய்து வந்தார். அவர் மீது, கொலைகள் உட்பட, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
அதேபோல, சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி; ரவுடி. இவரது சித்தப்பா துரை வியாசர்பாடியில் பெரிய ரவுடியாக வலம் வந்தார். அதை பார்த்து, பாலாஜியும் கத்தியை எடுத்தார்.
வெளி மாவட்டங்களிலும், 'அசைன்மென்ட்'களை முடித்து பெரிய ரவுடியாக உருவெடுத்தார். அவர் மீதும், கொலை, ஆள் கடத்தல் என, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி இருவரும், 2020, மார்ச் 3ல், சென்னை அண்ணா சாலையில், டொயோட்டா பார்ச்சூனர் காரில் பயணம் செய்தனர்.
சிடி மணிக்கு சொந்தமான இந்த காரை வழக்கறிஞர் ஒருவர் ஓட்டினார். இவர்களை மூன்று கார் மற்றும் நான்கு இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் பின்தொடர்ந்தனர். இதை சிடி மணி பார்த்து விட்டார்.
அதனால், தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே, ரூட்டை மாற்றி ஓட்டச் சொல்லி, காமராஜர் அரங்கம் அருகே, மேயர் சுந்தர் ராவ் சாலையில் மின்னல் வேகத்தில் காரில் பறந்தனர்.
தலைமறைவு
அப்போது மர்ம நபர்கள், கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அதிர்ஷ்ட வசமாக சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் உயிர் தப்பினர்.
இதன் பின்னணியில், வடசென்னை ரவுடி சம்பவம் செந்தில், மயிலாப்பூரை சேர்ந்த சிவகுமார் இருப்பது தெரியவந்தது. அவர்களில், சிவகுமார் தீர்த்து கட்டப்பட்டு விட்டார். செந்தில் தலைமறைவாக உள்ளார்.
முன்விரோதம் காரணமாக, சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி, சம்பவம் செந்தில், சிவக்குமார் ஆகியோரின் கூட்டாளிகள், கூலிப்படையினர், ஒருவரை ஒருவர் தீர்த்துக்கொள்ள துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் களமிறங்கி இருக்கும் தகவல், ஒ.சி.ஐ.யு., என்ற ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு மற்றும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ரவுடி கும்பலை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'கூலிப்படையினராக செயல்படும் ரவுடிகள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மாறி மாறி தப்பி வருகின்றனர். சென்னை முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவம் நடப்பதற்குள் பிடித்து விடுவோம்' என்றனர்.