டிசம்பரில் நடக்கிறது ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
டிசம்பரில் நடக்கிறது ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
ADDED : செப் 03, 2024 02:15 AM
சென்னை: ரயில்வேயில் முதல் முறையாக, 2007ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடந்தது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே, ரயில்வே நிர்வாகத்துடனான பேச்சில் பங்கேற்க முடியும். 2013ல் நடந்த தேர்தலில், எஸ்.ஆர்.எம்.யு., சங்கம், 43 சதவீத வாக்குகளை பெற்று தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2019ம் ஆண்டுக்கு பின் தேர்தல் நடக்கவில்லை. இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், வரும் டிச., 4, 5, 6ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும், 9ம் தேதி தேர்தல் விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவை பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வருகின்றன.
தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு., எனப்படும், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ், எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.