ADDED : பிப் 25, 2025 11:14 PM
சென்னை:'ரயிலில் பயணியர், பயணம் செய்வதற்கு முன்பு ரயில்வே அனுப்பும் எஸ்.எம்.எஸ்., அல்லது பி.என்.ஆர்.,ஐ சரிபார்த்துக் கொள்ளவும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு காலம், கடந்த நவ., 1- முதல், 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டன. விரைவு ரயில்களில் தேவைக்கேற்ப, முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
இவ்வாறு, ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்போது, முன்பதிவு செய்வோருக்கு, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இருக்கை எண், கணினி தொழில்நுட்பம் வாயிலாக, தானியங்கி முறையில் மாறிவிடும்.
இதுகுறித்த தகவல் பயணியருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்படும். குறிப்பாக ரயில் புறப்படுவதற்கு, நான்கு மணி நேரத்துக்கு முன்பு, ரயில் பெட்டி, இருக்கை எண் உறுதி செய்யப்படும்.
சமீபகாலமாக, இது குறித்த தகவல்கள், எஸ்.எம்.எஸ்., வழியாக, பயணியருக்கு அனுப்பப்பட்ட பிறகும், சிலர் ஏற்கனவே முன்பதிவு செய்த இருக்கைக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்போர், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு, ரயில்வே சார்பில் அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்.,ஐ பார்த்து, அதில் குறிப்பிட்டுள்ள இருக்கையில் பயணிக்க வேண்டும்.
காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர், பி.என்.ஆர்., நிலையை உறுதிசெய்து பயணிக்கவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.