ADDED : மே 06, 2024 11:24 PM
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதிகள் தேக்கடியில் 15.6 மி.மீ., பெரியாறில் 14.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக இருந்தது.
தமிழக பகுதிக்கு குடிநீருக்காக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1727 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 115 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி).
2023 டிசம்பருக்குப் பின் 4 மாதங்களாக மழை இல்லை. கடந்த 2 நாட்களாக நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் மழை பெய்தது.
கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கு ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பதற்கு அணையின் நீர்மட்டம் உயர வேண்டும். இதற்கு ஏற்றார் போல் தற்போது பெய்த மழை விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.