ADDED : ஜூலை 06, 2024 10:50 PM
சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 12ம் தேதி வரை, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் விஞ்ஞானி கீதா வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 12ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம், சேதுபாஸ்கர் அக்ரி கல்லுாரி, சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தலா 7 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, சென்னை அண்ணா பல்கலை, சிவகங்கை பயணியர் விடுதி, திருவள்ளூர், சென்னை தேனாம்பேட்டை, அண்ணாநகர், வளசரவாக்கம், ராணிப்பேட்டை பனப்பாக்கம் பகுதிகளில், தலா 6 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில், மாலை மற்றும் இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.