ADDED : மார் 07, 2025 06:43 PM

கல்வியைத் தேடுங்கள்
'ஓதுவீராக! அவன் எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்' என்கிறது குர்ஆன். ஒருவருக்கு பணம், பதவி, சொத்தை விட முக்கியம் அறிவு. அதைப்பெற கல்வி கற்பது அவசியம்.
ஒருமுறை முஆது என்ற தோழரை ஏமன் நாட்டுக்கு தன் பிரதிநிதியாக அனுப்ப தயாரானார் நபிகள் நாயகம். அவரிடம், 'அங்கே ஏதேனும் பிரச்னை வந்தால் எப்படி சமாளிப்பீர்கள்?' எனக் கேட்டார்.
அதற்கு முஆது, 'குர்ஆன் விளக்கங்களை அறிந்து தீர்வு காண்பேன்' என்றார்.
'அதற்கும் முடியாமல் போனால்'
'உங்கள் சொல், செயல்களில் இருந்து விளக்கம் அறிந்து தீர்ப்பேன்' என்றார் முஆது.
'அதனாலும் முடியாமல் போனால்'
'இந்த இரண்டின் அடிப்படையில் என் சொந்த அறிவைப் பயன்படுத்துவேன்' என்றார்.
இதைக் கேட்ட நாயகம், 'நீர் சத்தியவழியில் நடக்கிறீர்கள்' என்றார்.
மேலும் அவர் கல்வி குறித்து
* கல்வி ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள்.
* கல்வியைத் தேடி ஒருவன் புறப்படுகிறான் என்றால், இறைவனின் பாதையில் அவன் பயணம் செய்கிறான்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:58 மணி