ராஷ்டிரகூட மன்னர் தான செப்பேடு தெலுங்கானாவில் கண்டெடுப்பு
ராஷ்டிரகூட மன்னர் தான செப்பேடு தெலுங்கானாவில் கண்டெடுப்பு
ADDED : ஆக 08, 2024 02:16 AM

சென்னை:ராஷ்டிரகூடர்களில் புகழ்பெற்ற மன்னரான முதலாம் கிருஷ்ணராஜா தானமளித்த செப்பேடு, தெலுங்கானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுாறு ஆண்டுகள் பழமையான ஆவணங்களை வைத்திருப்போர், மத்திய தொல்லியல் துறையினரிடம் பதிவு செய்ய வேண்டும்; பதிவு செய்யாமல் வைத்திருப்பது, அரும்பொருள் சட்டப்படி குற்றம் என, அத்துறை அறிவுறுத்தி வருகிறது.
இதுகுறித்து, கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால், நாடு முழுதும் பலரிடம், அரிய பொக்கிஷங்கள் உள்ள விபரம் தெரிய வருகிறது.
தென்னிந்தியாவின் முதல் குடைவரை கோவிலான எல்லோரா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது. இதை ராஷ்டிரகூடர்கள் அறிமுகம் செய்தனர். அவர்களில் புகழ்பெற்ற மன்னரான முதலாம் கிருஷ்ணராஜா, பிராமணருக்கு ஊரை தானமளித்த அரிய செப்பேடு ஒன்று கிடைத்துள்ளது.
இதுகுறித்து, தென்மாநில கல்வெட்டியல் பிரிவு இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது:
தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில், பாசரா நதிக்கு அருகில் உள்ள போதன் என்ற கிராமத்தைச் சேர்ந்த, புருஷோத்தம் ரெட்டி, ராகி வைகுண்டாச்சாரி ஆகியோர் மூன்று செப்பேடுகளை, எங்கள் அலுவலகத்துக்கு எடுத்து வந்து, சுத்தம் செய்து தரும்படியும்; அதை, தொல்பொருளாக பதிவு செய்யும்படியும் கூறினர்.
அந்த செப்பேடுகள், சிறகுகளை விரித்து, கால்களை மடக்கி அமர்ந்த கருடன் முத்திரையுள்ள வளையத்தில் கோர்க்கப்பட்டிருந்தன.
அதில் நாகரி எழுத்துகளில், சமஸ்கிருத மொழியில், 756 -- 774ம் ஆண்டிற்குள், சில தகவல்கள் எழுதப்பட்டிருந்ததை கண்டறிந்தோம்.
இதில், ராஷ்டிரகூடர்களின் பரம்பரையை பற்றிய விளக்கமும், அதைத் தொடர்ந்து, பீமரதி நதிக்கரையில் ராஜா முகாமிட்டிருந்தபோது, அங்கிருந்த பிராமணர் ஒருவர் தகுதிமிக்க செயல் செய்ததை அறிந்து, அவருக்கு ஒரு கிராமத்தை தானமாக அளித்த செய்தியும் உள்ளது.
இதில், ஊர் மற்றும் தானம் பெற்றவரின் பெயர் தெளிவாக இல்லை. இந்த செப்பேடுகளை, தாராதேவன் என்பவர் பொறித்து உள்ளார்.
இதுவரை, முதலாம் கிருஷ்ணராஜாவின் ஆட்சி காலத்தைச் சேர்ந்த செப்பேடுகள் ஏதும் கிடைக்காத நிலையில், இது கிடைத்துள்ளதால், இதை மிகவும் அரிய ஆவணமாக கருதலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.