ADDED : செப் 08, 2024 05:27 AM

சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 33,000 ரேஷன் கடைகளை நடத்துகின்றன. ரேஷன் கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.
இந்த மானியம் குறித்த காலத்தில் வழங்கப்படுவதில்லை. அதனால், செலவுகளை சமாளிக்க முடியாமல், சங்கங்கள் நிதி நெருக்கடியில் திணறி வருகின்றன.
இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:
ரேஷன் கடை செலவுகளுக்காக கூட்டுறவு துறைக்கு ஆண்டுதோறும் சராசரியாக, 450 கோடி ரூபாயை, அரசு மானியமாக வழங்குகிறது.
அரசு விடுவிக்கும் மானியம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ரேஷன் கடைகளை நடத்தும் ஒவ்வொரு சங்கங்களுக்கும் வழங்கப்படுகிறது.
கடந்த, 2021 - 22 மானியத்தில், 3 சதவீதம்; 2022 - 23ல், 51 சதவீதம்; 2023 - 24ல், 40 சதவீதம் நிலுவை என, 750 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது.
இந்த நிதியை அரசு விடுவிக்காமல் தாமதம் செய்வததால், ரேஷன் கடை வாடகை, ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற செலவுகளை செய்ய முடியாமல், சங்கங்கள் திணறி வருகின்றன. எனவே, நிலுவையில் உள்ள மானிய தொகையை விரைந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.