மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி
ADDED : மே 15, 2024 06:09 AM

மதுரை: மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகள்:
வளாகத்தில் வீணாகும் இயற்கை கழிவுகளை, 'பயோ-காஸ்' திட்டத்தில் எரிபொருளாக மாற்றி, சமையலறைக்கு பயன்படுத்த வேண்டும். கழிவு நீரை சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத வகையில், 'ஜீரோ வேஸ்டேஜ்' ஆக சுத்திகரிக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
வளிமண்டலத்திலிருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் யூனிட்டை, இந்தியா அல்லது சர்வதேச தர நிர்ணயத்திற்கு உட்பட்ட வகையில் அமைத்து, ஆக்சிஜனை சொந்தமாக தயாரிக்க வேண்டும்.
ஆப்பரேஷன் தியேட்டர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, நச்சுக்களை வாரம் ஒரு முறை, காற்று மாதிரி பரிசோதனைக்கு எடுத்து, தரத்தை கண்காணிக்க வேண்டும்.
சிவகாசி, விருதுநகர் வெடி விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பல நிபந்தனைகளை மதிப்பீட்டு குழு பரிந்துரைத்துள்ளது.

