உச்சவரம்பு நிலத்தை விடுவிக்க மறுப்பு: கட்டுமான துறையினர் காத்திருப்பு
உச்சவரம்பு நிலத்தை விடுவிக்க மறுப்பு: கட்டுமான துறையினர் காத்திருப்பு
ADDED : மே 31, 2024 12:57 AM

சென்னை: தனியார் உச்சவரம்பு நிலங்களை விடுவிப்பதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், புதிய கட்டடங்கள் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டுமான துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 1961ல் நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, தனியாரிடம் இருந்த கூடுதல் நிலங்கள், அரசுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டன.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட மிகை நிலங்களை, அரசு துறைகள் உரிய முறையில் கையகப்படுத்த தவறிவிட்டன.
எனவே, மிகை நிலங்களை, பழைய உரிமையாளர்களே பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இந்த நிலங்களை, பல்வேறு பாகங்களாக வாங்கி, பொதுமக்கள் பயன்படுத்த துவங்கினர்.
இந்த நிலங்கள் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இதற்கு பட்டா மாறுதல், கட்டுமான திட்ட அனுமதி, வங்கிக்கடன் பெறுதல் போன்றவற்றில் பிரச்னை ஏற்படுகிறது.
அதனால், உச்சவரம்பு நிலங்களை வரன்முறை செய்யும் திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 1994 டிசம்பர் 31க்கு முன் கிரையம் பெறப்பட்ட நிலங்கள், குறிப்பிட்ட கட்டண அடிப்படையில் வரன்முறை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.
இதில், 2012க்கு பின் வரன்முறை பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்டன. இதனால், தகுதி இருந்தும் தாங்கள் வாங்கிய நிலங்களுக்கு, வரன்முறை சலுகை பெற முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.