மறுபிறவி கருத்துக்கள் ஏராளம்; மகா விஷ்ணு பேச்சுக்கு திருக்குறளே சாட்சி!
மறுபிறவி கருத்துக்கள் ஏராளம்; மகா விஷ்ணு பேச்சுக்கு திருக்குறளே சாட்சி!
UPDATED : செப் 08, 2024 04:59 PM
ADDED : செப் 08, 2024 11:04 AM

சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள பேச்சாளர் மகா விஷ்ணு கூறிய மறுபிறவி கருத்துக்கள் திருக்குறளில் ஏராளம் உள்ளன.
பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரான மகா விஷ்ணு, சென்னை அசோக் நகர் பள்ளியில் மறுபிறவி, பாவம், புண்ணியம் பற்றி பேசியது சர்ச்சை ஆகியுள்ளது. மறுபிறவி என்பதே மூடநம்பிக்கை என்று வெவ்வேறு அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால், மறுபிறவி பற்றிய கருத்துக்கள், சங்க இலக்கியங்களில் நிறைய காணப்படுகின்றன. உலகம் முழுவதும் போற்றி புகழப்படும் திருக்குறளில் கூட, ஏராளமான குறட்பாக்கள் உள்ளன.
பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (திருக்குறள் 10)
பொருள்: இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்களே பிறவி என்னும் பெருங்கடலை கடந்து செல்வர்; சேராதவர்கள் கடந்து செல்ல முடியாது.
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் (திருக்குறள் 62)
பொருள்: பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால், அவரை ஏழு பிறப்பிலும் தீவினை பயன்கள் தீண்டாது.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு (திருக்குறள் 107)
பொருள்: தமக்கு ஒரு துன்பம் நேரும்போது உதவி செய்தவர்களின் நட்பை, சான்றோர் ஏழு பிறப்புகளிலும் நினைத்திருப்பர்
ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து (திருக்குறள் 126)
பொருள்: ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக்கொண்டால், அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாப்பாக இருக்கும்
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 398)
பொருள்: ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது, அவரது ஏழு பிறவிகளிலும் அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் (குறள் 538)
பொருள்: முட்டாளான ஒருவர், ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய துன்பத்தை ஒரே பிறவியில் அனுபவித்து விடுவார்.
இது மட்டுமின்றி, இலக்கியங்கள் பலவற்றிலும் ஏழு பிறவிகள், மறுபிறவி என்பனவற்றை குறிப்பிடும் பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.