நீக்கப்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.,வில் மீண்டும் சேர்ப்பு
நீக்கப்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.,வில் மீண்டும் சேர்ப்பு
ADDED : பிப் 15, 2025 02:38 AM
சென்னை:ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்க்க, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் நான்கு பேர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, 2023 மார்ச் மாதம், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் விளையாட்டு மைதானம் திறக்க வந்தார்.
விழா அழைப்பிதழில், சிவா எம்.பி., பெயர் இல்லை. ஆத்திரம் அடைந்த சிவா ஆதரவாளர்கள், அமைச்சர் நேருவுக்கு கருப்பு கொடி காட்டினர். கொந்தளித்த அமைச்சர் ஆட்கள், சிவா வீட்டுக்குள் புகுந்து அவரது காரை அடித்து நொறுக்கினர்.
இதுதொடர்பாக, அமைச்சர் ஆதரவாளர்களும், கவுன்சிலர்களுமான காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், மாவட்ட நிர்வாகி துரைராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தி.மு.க.,வில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இவர்கள் தங்களை மீண்டும் கட்சியில் சேர்க்க கோரியும், மன்னிப்பு கேட்டும், தலைமைக்கு கடிதம் கொடுத்தனர். அதை ஏற்று, நால்வரையும் கட்சியில் சேர்த்து, பொதுச் செயலர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. அதனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்க்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
தென் மண்டலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்களும் கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களையும் சேர்த்து, மீண்டும் பொறுப்பு வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.