ADDED : ஜூன் 09, 2024 05:02 AM

சென்னை: 'நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம், தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சி பாய்ச்சல்' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைதள பதிவு:
கடந்த 2016ல் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநில கட்சியாக பரிணமித்திருப்பது, தமிழின அரசியல் வரலாற்றில், ஒரு புத்தெழுச்சி பாய்ச்சல்.
சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி என, பல அடக்குமுறைகளை தாண்டி, ஜாதி, மதம், மது, பணம் என புரையோடிப்போன சமூக தீங்குகளை கடந்து, நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் ஓட்டுகள் பெரும் ஜனநாயக மறுமலர்ச்சியாகும்.
இத்தேர்தலில் வெற்றி என்ற இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான ஓட்டுகளை பெற்று, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வை தருகிறது. மாநில கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026 சட்டசபை தேர்தலில், மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க உறுதி ஏற்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.