ADDED : மே 30, 2024 11:32 PM
சென்னை:'திருவாரூர் மாவட்டம், நல்லுாரில் இயங்கும் ராஜா வேத பாடசாலைக்கு கொடையுள்ளம் கொண்டோர் உதவ வேண்டும்' என, அதன் நிர்வாக அறங்காவலர் ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவாரூர் மாவட்டத்தில், கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், 15 கி.மீ., துாரத்தில் உள்ள நல்லுாரில், கோச்செங்கட்சோழன் கட்டியதும், அமர்நீதி நாயனாருக்கு காட்சியளித்ததுமான கிரிசுந்தர அம்மன் - கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற கோவில் உள்ளது. இங்கு, 50 ஆண்டுகளுக்கு முன் வேத பாடசாலை இயங்கியது.
பல்வேறு காரணங்களால் அது செயல்படாத நிலையில், கடந்த நான்காண்டுகளாக, 'நல்லுார் ராஜா பாடசாலை டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை துவக்கி, உள்ளூர், வெளியூர் ஆன்மிகப் பெரியோர்களால், 'நல்லுார் ராஜா பாடசாலை' என்ற பெயரில் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
இதில், குருகுல முறையில் ஏழு வித்யார்த்திகளுக்கு சாம வேத பாடங்களும், சமஸ்கிருதம், ஆங்கில மொழியுடன் கணிதப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. மேலும், கோசாலை ஒன்றும் செயல்படுகிறது. கார்த்திகை, மாசி மாதங்களில் வேத பண்டிதர்களால் ரிக், யஜூர், சாம, வேத பாராயணங்களும் நடத்தப்படுகின்றன. இதற்கு, மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் நிலையில் பொருளாதார நெருங்கடி ஏற்பட்டுள்ளது.
வித்யார்த்திகளை அதிகரிக்கவும், வேதங்கள் ஓங்கி, உலகம் சிறக்கவும் எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்கும் வகையில், ஆன்மிகப் பெரியோர்கள் இதற்கு நன்கொடை அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 63818 82423 என்ற மொபைல் எண்ணிலோ, 94984 98639 என்ற, 'வாட்ஸாப்' எண்ணிலோ பேசலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.