எம்.எம்.ஆர்., தடுப்பூசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
எம்.எம்.ஆர்., தடுப்பூசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
ADDED : மார் 11, 2025 12:45 AM

சென்னை: 'ஆண்டு முழுதும் பாதிக்கும் அம்மை நோயை கட்டுப்படுத்த, எம்.எம்.ஆர்., எனப்படும், 'மீசில்ஸ் மம்ப்ஸ் ரூபெல்லா' முத்தடுப்பூசி திட்டத்தை, மத்திய அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், கோடை கால நோய்களாக இருந்த, 'மீசில்ஸ்' என்ற தட்டம்மை, சின்னமுத்து, மணல்வாரி அம்மை நோய்; 'மம்ப்ஸ்' என்ற கூகைக்கட்டு அம்மை, பொன்னுக்கு வீங்கி, 'ரூபெல்லா' என்ற, முகத்தில் துவங்கி உடலின் கால் பாகம் நோக்கி செல்லும் சிவப்பு நிற தோல் நோயான ஜெர்மன் தட்டம்மை போன்றவை, முன்னர் கோடை கால நோய்களாக இருந்தன.
தற்போது அவை, மழை மற்றும் குளிர் காலத்திலும் குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருகின்றன. இந்த நோய்களை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த தேசிய தடுப்பூசி திட்டத்தில், குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில், எம்.எம்.ஆர்., தடுப்பூசி முதல் தவணை; 12 முதல், 15வது மாதத்தில், இரண்டாவது; 4 முதல் 6 வயதிற்குள் மூன்றாவது தவணை வழங்கப்பட்டது.
இதில், மம்ப்ஸ் பாதிப்பு பெருமளவு குறைந்ததால், அதற்கான தடுப்பூசி, முத்தடுப்பூசி திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில், எம்.ஆர்., தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மம்ப்ஸ் தடுப்பூசி நிறுத்தப்பட்டு, ஏழாண்டுகளுக்கு மேலான நிலையில், அந்நோயானது தற்போது ஆண்டு முழுதும் பாதிக்கும் தன்மை உள்ளதாக மாறியுள்ளது.
எனவே, இந்நோயை கட்டுப்படுத்த, மீண்டும் எம்.எம்.ஆர்., தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: மம்ப்ஸ் பாதிப்பின் தீவிரம், பெரும்பாலானோருக்கு இல்லை என்றாலும், சிலருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, எம்.எம்.ஆர்., தடுப்பூசி, தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது. ஒரு டோஸ், 1,000 ரூபாய் என்ற அளவில் உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள், அரசு மருத்துவமனைகளையே நம்பி உள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மம்ப்ஸ் பாதிப்புகள் அடிப்படையில், ஒருங்கிணைந்த தேசிய தடுப்பூசி திட்டத்தில், மம்ப்ஸ் சேர்த்து, எம்.எம்.ஆர்., தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். அவர்களும் ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.