மேட்டூர் அணை நீரில் சிக்கிய நாய்கள் மீட்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்
மேட்டூர் அணை நீரில் சிக்கிய நாய்கள் மீட்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்
ADDED : ஆக 08, 2024 01:19 AM
சென்னை:மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் பகுதியில் உள்ள பாறையில் சிக்கிய நாய்கள் மீட்கப்பட்டு விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நிரம்பியதால், உபரிநீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள பாறையில் நாய்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கும், தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் உத்தரவிடக் கோரியும், பிராணிகள் நல ஆர்வலரான பிரகாஷ் காந்த் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேட்டூர் அணை பகுதியில் சிக்கிய நாய்கள், வருவாய்த்துறை அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.