ADDED : மார் 29, 2024 10:15 PM

திருப்பூர்:உலக நாடுகள் மத்தியில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, வளர்ந்த நாடுகள், இறக்குமதி பொருட்கள் உற்பத்தியிலும் கவனம் செலுத்த துவங்கி விட்டன. இயற்கைக்கு பாதிப்பில்லாத, பசுமை சார் உற்பத்தியாக அவை இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன.
பின்னலாடை ஏற்றுமதி தலைநகராகிய திருப்பூர், 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கு மாறிவிட்டது.
சாயக்கழிவு சுத்திகரிப்பில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம்; பனியன் கட்டிங் வேஸ்ட்களில் இருந்து மீண்டும் நுால் தயாரிப்பு, அதிகபட்ச மரம் வளர்ப்பு, மாநில அளவில் அதிக காற்றாலை மின் உற்பத்தி; சோலார் மின் உற்பத்தி; மழைநீர் சேகரிப்பு, 'பெட்' பாட்டில்களில் இருந்து ஆடைகள் உருவாக்கும் மறுசுழற்சி தொழில்நுட்பம் என, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறது.'
சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், ஜவுளி இறக்குமதியில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இனிமேல், அவற்றின் நிபந்தனையை பூர்த்தி செய்யும் நாடுகள் மட்டுமே அவற்றுடன் வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இறக்குமதி நாடுகளில் உள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களை, திருப்பூர் அழைத்து வந்து, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி பணிகள் குறித்து நேரில் விவரிக்கப்படுகிறது. இதன்வாயிலாக, திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி சாதனைகள் உலக நாடுகளுக்கு தெரியவருகிறது.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு - பியோ தலைவர் சக்திவேல் கூறுகையில், ''உலக நாடுகள் எதிர்பார்க்கும் உற்பத்தி தரத்தை, திருப்பூர் 15 ஆண்டுகளாக பின்பற்றியும், செயல்படுத்தியும் வருகிறது. திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி சாதனையை உலகம் அறிய வேண்டும்.
''திருப்பூர் வரும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்களை பார்வையிட்டு பாராட்டியுள்ளன. வளர்ந்த நாடுகள் ஏற்றுக்கொண்ட, 'புளூ ஷைன்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
அந்நிறுவனம் வழங்கும் பசுமை தரச்சான்று லேபிளை ஆடையில் இணைக்கும் போது, வளர்ந்த நாடுகளில் இருந்து புதிய ஆர்டர்கள் கிடைக்கும்,'' என்றார்.

