'ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் ஓய்வு நீதிபதி சந்துரு அறிக்கை'
'ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் ஓய்வு நீதிபதி சந்துரு அறிக்கை'
ADDED : ஜூன் 26, 2024 08:02 AM

திண்டுக்கல் : ''ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் விதம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கைகளை அளித்துள்ளார்,'' என, திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டமாக கூறினார்.
அவர் கூறியதாவது : ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்கள் இருந்தன. திப்பு சுல்தான் படையெடுப்பு காலத்தில் விக்ரகங்கள் அகற்றப்பட்டன. தற்போது அபிராமி அம்மன் கோயிலில் உள்ளன. மீண்டும் மலைமீது அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் விக்ரகங்களை நிறுவ வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு ஹிந்து முன்னணி ஆதரவு அளிக்கிறது. இதற்காக ஜூலை 5 முதல் 20 வரை கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளோம். அரசியல் கட்சிகள் ஓட்டுகளுக்காக பயப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் ஹிந்து முன்னணி களத்தில் நிற்கும்.
ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு மாணவர்கள் நெற்றியில் திலகம், பொட்டு, பூ வைக்கக் கூடாது. கைகளில் கயிறுகளை கட்டி பள்ளிக்கு வரக்கூடாது என பரிந்துரைகளை செய்துள்ளது. சிலுவை, தொப்பி, பர்தா அணியக்கூடாது என கூறவில்லை. ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் விதம் பரிந்துரை செய்துள்ள அவரது நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் கூலிக்கு விற்பனை செய்யும் அப்பாவிகள் சிலரை கைது செய்துள்ளனர். இதன் பின்னணியில் அரசியல் பின்புலம் உள்ளது. போதை கடத்தலில் சிக்கிய ஜாபர் சாதிக் போல் இந்த விவகாரத்திற்கு பின்னாலும் பெரிய அரசியல் உள்ளது என்றார்.