'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.45,856 கோடி வருவாய்
'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.45,856 கோடி வருவாய்
ADDED : ஜூன் 22, 2024 05:13 AM

சென்னை : தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,829 கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. மது வகை மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்புக் கூட்டு வரி வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
அதன்படி, 2023 - 24ல் ஆயத்தீர்வை வாயிலாக, 10,774.28 கோடி ரூபாய்; மதிப்புக் கூட்டு வரியாக, 35,081.39 கோடி ரூபாய் என, மொத்தம், 45,856 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது, 2022 - 23ல், 44,121.13 கோடி ரூபாயாகவும், 2021 - 22ல், 36,050.65 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மது கடைகளை ஆய்வு செய்ய, தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக, ஆய்வு செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை, டாஸ்மாக் மேலாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள், கலால் உதவி ஆணையர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ஆய்வின் போது ஊழியர்கள் வருகை, சரக்கு இருப்பு, விலை பட்டியல், கண்காணிப்பு கேமரா இயக்கம், கடைகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்த ஆய்வு குறிப்பு உள்ளிட்டவை செயலியில் பதிவு செய்யப்படும்.
கடந்த ஆண்டில் கள்ளச்சாராயம் தொடர்பாக, 12,431 வழக்குகள் பதியப்பட்டு, 12,422 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 4.64 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.