அரிசிக்கு வரி விதிக்கும் சட்ட திருத்தம்: கைவிட வணிகர்கள் கோரிக்கை
அரிசிக்கு வரி விதிக்கும் சட்ட திருத்தம்: கைவிட வணிகர்கள் கோரிக்கை
ADDED : ஆக 09, 2024 01:59 AM

சென்னை: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ், 25 கிலோ வரை எடையுள்ள, 'பேக்கிங்' செய்யப்பட்ட அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.
வரி விதிப்பை தவிர்க்க, மேற்கண்ட உணவு தானியங்கள், 26 கிலோ, 30 கிலோ எடையில் பேக்கிங் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
மத்திய அரசு, எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளது. இதனால், 26 கிலோவுக்கு மேல் பாக்கெட்டில் உள்ள தானியங்களுக்கும் ஜி.எஸ்.டி., விதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, அத்தியாவசிய தானியங்களின் விலை உயரலாம்.
எனவே, எடையளவு சட்ட திருத்தத்தை கைவிடுமாறு, மத்திய அரசுக்கு தமிழக வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானப்படி, 25 கிலோவுக்கு கீழ் உள்ள அத்தியாவசிய உணவு தானியங்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி., தற்போது 26 கிலோவுக்கு மேல் என்று மாற்றப்பட உள்ளது. இதனால், அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி., வந்து விடும்.
இதனால், ஏழைகள் பாதிக்கப்படுவர். எனவே, அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வேண்டும். இது குறித்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலர் நிதிகரேவிடம் வலியுறுத்தினோம்.
அவர் மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளிக்கவில்லை. எனவே, எடையளவு சட்ட திருத்தம் செய்யக்கூடாது என்று மத்திய அரசிடம், தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கோரிக்கையை, தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன நிர்வாகிகள், சென்னையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையையும் சந்தித்து வலியுறுத்தினர்.