கப்பலில் சிக்கிய ரூ.15 கோடி போலி சிகரெட்டுகள் பறிமுதல்
கப்பலில் சிக்கிய ரூ.15 கோடி போலி சிகரெட்டுகள் பறிமுதல்
ADDED : ஆக 30, 2024 10:58 PM
சென்னை:துபாய் மற்றும் தாய்லாந்தில் இருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி சிகரெட்டுகளை, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த 8ம் தேதி தாய்லாந்தில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு, சரக்கு கப்பல் ஒன்று வந்தது. அதிலிருந்த கன்டெய்னர் பெட்டிகளை, அதிகாரிகள் சோதனையிட்டனர். உள்ளே அடுக்கடுக்காக போலி சிகரெட்டுகள் இருந்தன.
அவற்றை கணக்கிட்டதில், 67.5 லட்சம் போலி சிகரெட்டுகள் இருந்துள்ளன. அதன் சர்வதேச மதிப்பு, 10 கோடி ரூபாய்.
துபாயில் இருந்து, 14ம் தேதி வந்த சரக்கு கப்பலை சோதனை செய்ததில், பண்டல் பண்டலாக, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 லட்சம் போலி சிகரெட்டு கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலானய்வு அதிகாரிகள், வழக்குகள் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
போலி சிகரெட்டு களில், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருக்காது. வழக்கமான சிகரெட்டுகளை போல இல்லாமல், அதிகளவில் நிகோடின், ஆர்சனிக் போன்ற வேதி பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
இந்த சிகரெட்டுகளை புகைத்தால், மிக விரைவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், நரம்பு மண்டலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.