கோழிக்கோட்டில் துணிகர சம்பவம்; முகத்தில் மிளகாய்ப்பொடி வீசியடித்து ஏ.டி.எம்., பணம் ரூ.25 லட்சம் கொள்ளை
கோழிக்கோட்டில் துணிகர சம்பவம்; முகத்தில் மிளகாய்ப்பொடி வீசியடித்து ஏ.டி.எம்., பணம் ரூ.25 லட்சம் கொள்ளை
ADDED : அக் 20, 2024 09:37 AM

கோழிக்கோடு: கோழிக்கோட்டில் எடி.எம்.முக்கு பணம் கொண்டு சென்ற கார் டிரைவர் மீது மிளகாய் பொடியை வீசியடித்த மர்ம நபர்கள், ரூ.25 லட்சம் கொள்ளையடித்து தப்பினர்.
கேரளா, கோழிக்கோடு பீடிகா என்ற இடத்தில், காரில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது காரை வழிமறித்த, மர்மநபர்கள் டிரைவரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். கார் டிரைவர் எரிச்சல் தாங்காமல் அலறித்துடித்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, காரில் இருந்த ரூ.25 லட்சத்தை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பிவிட்டனர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் காருக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தவர்களை மீட்டனர்.
கொயிலாண்டி போலீசார், கார் டிரைவர் சுஹைலையும், அவரது வாகனத்தையும் கைப்பற்றினர். ஏடி.எம்.,களில் பணம் நிரப்புவதற்காக ரூ.25 லட்சம் கொண்டு செல்லப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கார் டிரைவர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சாட்சியங்கள் சேகரித்தனர். மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பய்யோலியைச் சேர்ந்த கார் டிரைவர் சுஹைல் கூறியதாவது: காரில் சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் வழிமறித்தனர். நிறுத்தாமல் செல்ல முயற்சி செய்தேன். அப்போது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, காரைக் கட்டுப்படுத்தினர். பணத்தை திருடிவிட்டு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என்றார்.