ADDED : மே 06, 2024 11:28 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கித்தருவதாக ரூ.3 கோடி பெற்றுக்கொண்டு காரைக்குடியை சேர்ந்த அழகப்பன் தன்னை ஏமாற்றியதாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷிடம் நடிகை கவுதமி புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: தற்போது சென்னையில் வசிக்கும் காரைக்குடியை சேர்ந்த அழகப்பன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பகுதி சுவாத்தான் கிராமத்தில் பிளசிங் அக்ரோ பார்ம் நிறுவனத்திற்கு சொந்தமான 64 ஏக்கர் நிலத்தை பவர் பெற்று எனக்கு ரூ. 3 கோடிக்கு விற்றார்.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) இந்த இடத்தின் விற்பனைக்கு தடை விதித்திருந்த நிலையில் அதை ரூ.57 லட்சத்திற்கு வாங்கி அழகப்பன் எனக்கு விற்று மோசடி செய்துள்ளார்.
அழகப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே ஏப்.11ல் ஆன்-லைனில் எஸ்.பி.,க்கு புகார் அளித்தேன். தற்போது நேரில் புகார் அளித்துள்ளேன், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.
எஸ்.பி., கூறுகையில், பல இடங்களில் நடந்துள்ள இந்த நில மோசடி ராமநாதபுரத்திலும் நடந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேபோன்று கவுதமி அளித்த நில மோசடி புகாரில் அழகப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.