ரேஷன் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிக விலை: அரசு கொள்முதலில் ரூ.60 கோடி இழப்பு அபாயம்
ரேஷன் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிக விலை: அரசு கொள்முதலில் ரூ.60 கோடி இழப்பு அபாயம்
ADDED : மே 06, 2024 12:14 AM

சென்னை: ரேஷன் கடைகளில் வழங்க, 20,000 டன் கனடா மஞ்சள் பருப்பு, வெளிச்சந்தையை விட கிலோ, 30 ரூபாய் கூடுதல் விலைக்கு வாங்கும் முயற்சி நடக்கிறது. இதனால் அரசுக்கு, 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் தனிக்குழு அமைத்து தீவிர விசாரணைக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு, நுகர்பொருள் வாணிப கழகத்திடம் எழுந்துள்ளது.
கனடா மஞ்சள் பருப்பு
தமிழக ரேஷன் கடைகளில், கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதை வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது.
துவரம் பருப்பு விலையை விட கனடா மஞ்சள் பருப்பு, 40 ரூபாய் வரை விலை குறைவாக உள்ளது. இதனால், பல ஆண்டுகளாக, கனடா மஞ்சள் பருப்பு வழங்கப்படுகிறது.
இந்த பருப்பு உள்நாட்டில் கிடைக்காததால், கனடாவில் இருந்து இறக்குமதி செய்து, சில நிறுவனங்கள் அரசுக்கு வினியோகம் செய்கின்றன. கடந்த ஜனவரியில் கிலோ, 129.65 ரூபாய் விலையில், 45,000 டன் கனடா மஞ்சள் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது.
இதன்பின், கடந்த மார்ச்சில், 60,000 டன் கனடா மஞ்சள் பருப்பு அல்லது துவரம் பருப்பு வாங்க டெண்டர் கோரப்பட்டது.
அதில், கிலோ துவரம் பருப்புக்கு, 159 ரூபாய் விலை புள்ளி வழங்கப்பட்டது. சில நிறுவனங்கள் தங்களுக்குள், 'சிண்டிகேட்' எனப்படும் கூட்டு அமைத்து, வேண்டுமென்றே கனடா மஞ்சள் பருப்புக்கு விலை வழங்கவில்லை.
எனவே, துவரம் பருப்பு விலை அதிகம் இருப்பதாக தெரிவித்து டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த உடனே, 20,000 டன் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் பருப்பு வாங்க ஏப்ரல் இறுதியில், நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியது. அதில், கனடா மஞ்சள் பருப்பு சப்ளை செய்ய நிறுவனங்கள் விலை புள்ளி வழங்கி உள்ளன.
அந்நிறுவனங்கள், இதற்கு முன் கோரப்பட்ட டெண்டரில் வேண்டுமென்றே கனடா பருப்புக்கு விலைபுள்ளி வழங்காமல், தாங்கள் பதுக்கி வைத்துள்ள பருப்பை, இந்த முறை அதிக விலைக்கு விற்கும் வகையில் இந்த டெண்டரில் பங்கேற்றுள்ளன.
அதன்படி, ஏப்ரலில் கோரப்பட்ட டெண்டரில் துவரம் பருப்புக்கு, ஆறு நிறுவனங்கள்; கனடா மஞ்சள் பருப்புக்கு, ஐந்து நிறுவனங்கள்; துவரம் பருப்பு போன்று சுவை உடைய, 'பட்கா' பருப்புக்கு இரு நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.
20,000 டன்
அந்நிறுவனங்களின் விலை புள்ளி, கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. அதில், கனடா மஞ்சள் பருப்புக்கு, 162.82 ரூபாய்க்கு விலை புள்ளி வழங்கப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கு, 165 முதல், 171 ரூபாய் வரை விலை புள்ளி தரப்பட்டுள்ளது.
கனடா பருப்பின் தற்போதைய சந்தை விலை, 120 ரூபாய் - 130 ரூபாய். துவரம் பருப்பு கிலோ, 160 முதல், 165 ரூபாய்க்கு கிடைக்கிறது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்தில், இன்று காலை, 11:30 மணிக்கு அதிகாரிகள், டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களுடன் விலை குறைப்பு பேச்சு நடத்துகின்றனர்.
துவரம் பருப்புடன் ஒப்பிடும் போது, கனடா மஞ்சள் பருப்பு விலை குறைவாக இருப்பதை தெரிவித்து, தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களிடம் இருந்து, அந்த பருப்பை வாங்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, கண்துடைப்பிற்காக பேச்சு நடத்தி கனடா பருப்புக்கு, கிலோவுக்கு 1 ரூபாய், 2 ரூபாய் குறைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதனால், அரசுக்கு கிலோவுக்கு, 30 ரூபாய் என, வைத்து கொண்டால் கூட, 20,000 டன்னுக்கு, 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
எனவே, இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் குழு அமைத்து, தீவிர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, வாணிப கழகத்தில் பணிபுரியும் நேர்மையான அதிகாரிகளிடம் எழுந்துள்ளது.