நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி நிலம் மோசடி: 12 பேர் மீது வழக்கு
நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி நிலம் மோசடி: 12 பேர் மீது வழக்கு
ADDED : மே 27, 2024 11:31 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே துலுக்கன்குறிச்சி கிராமத்தில் நிலம் வாங்கித் தருவதாக 3.16 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடிகை கவுதமி அளித்த புகார் அடிப்படையில் அழகப்பன், அவரது குடும்பத்தார், நில புரோக்கர் உட்பட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடிக்கும் போது கிடைத்த பணத்தை நிலம் வாங்குவதில் கவுதமி முதலீடு செய்தார். அப்போது சென்னையை சேர்ந்த அழகப்பன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே துலுக்கன்குறிச்சியில் 150 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு வருவதாக கூறியுள்ளார். நில புரோக்கர் நெல்லியான் என்பவரிடம் 2016 மார்ச் 16 ல் பேசி முடித்துவிட்டதாகவும், 3.16 கோடி ரூபாய் பணம் தேவை எனக் கேட்டுள்ளார். இதையடுத்து அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள் கணக்கில் பணமாகவும், காசோலையாகவும் 3.16 கோடி ரூபாயை கவுதமி கொடுத்துள்ளார்.
இதில் செபி நிறுவனம் விற்பனை செய்யக்கூடாது என அறிவித்த நிலம் 64 ஏக்கரையும் அழகப்பன், நெல்லியான், பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிட்டெட் நிர்வாக இயக்குநர்களான ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர், அழகப்பன் கூட்டாளிகளான ரமேஷ் சங்கர்ேஷானாய், கே.எம்.பாஸ்கர், விசாலாட்சி, நாச்சியாள், அழகப்பன் மகன்கள் சொக்கலிங்கம், சிவ அழகப்பன், மருமகள் ஆர்த்தி ஆகியோர் 56.47 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தனர். மீதி பணத்தை மோசடி செய்தனர்.
இந்த மோசடி குறித்து கவுதமி ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் இடம் மே 6ல் புகார் அளித்தார்.
எஸ்.பி., உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்புகாரில் குறிப்பிட்ட அழகப்பன், நாச்சியாள், நெல்லியான் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிந்து இன்ஸ்பெக்டர் இளவேனில் தலைமையில் விசாரணை நடக்கிறது.