ரூ.43,000 கோடி நகை கடன் தர கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி
ரூ.43,000 கோடி நகை கடன் தர கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி
ADDED : மே 06, 2024 12:10 AM

சென்னை: கூட்டுறவு வங்கிகளும், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களும் பயிர் கடன், நகைக்கடன், சுய உதவி குழு கடன் என, பல பிரிவுகளில் கடன் வழங்குகின்றன.
கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. அசல் மற்றும் வட்டியை ஓராண்டிற்குள் செலுத்தவில்லை என்றாலும், உடனே ஏலம் விடப்படுவதில்லை.
இதனால், பலரும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பு நிதியாண்டில், மாநில தலைமை கூட்டுறவு வங்கி வாயிலாக, நகைக்கடன், 3,000 கோடி ரூபாயும்; சுயஉதவி குழு கடன், 100 கோடி ரூபாயும்; வீடு கட்ட வழங்கும் கடன், 25 கோடி ரூபாயும்; வீட்டு அடமான கடன், 25 கோடி ரூபாயும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன், 15,000 கோடி ரூபாய்; சுயஉதவி குழு கடன், 2,000 கோடி ரூபாய்; சிறு வணிக கடன், 600 கோடி ரூபாய்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, நகைக் கடன், 25,000 கோடி ரூபாய்; சுயஉதவி குழுக்களுக்கு, 3,000 கோடி ரூபாய்; தானிய கடன், 500 கோடி ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு, 50 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.