வாகனங்களில் 'போலீஸ்' ஸ்டிக்கர் 421 பேருக்கு ரூ.500 அபராதம்
வாகனங்களில் 'போலீஸ்' ஸ்டிக்கர் 421 பேருக்கு ரூ.500 அபராதம்
ADDED : மே 03, 2024 01:42 AM

சென்னை:விதிகளை மீறி வாகன பதிவு எண் தகட்டில், 'போலீஸ்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டியிருந்த, 421 வாகன ஓட்டிகளுக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என, சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர், வாகனங்களில் போலீஸ், ஊடகம், தலைமை செயலகம், டி.என்.இ.பி., என, 'ஸ்டிக்கர்' ஒட்டி தப்பித்து விடுவதாக கூறப்படுகிறது.
இதனால், இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களையும் சோதனை செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக, வாகன பதிவு எண் தகட்டில் போலீஸ் என, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். சென்னை முழுதும் நேற்று, 64 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், 421 வாகன ஓட்டிகள் சிக்கினர்.
அவர்களுக்கு தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். போலீஸ் என ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கரும் அகற்றப்பட்டது. இந்த வாகன ஓட்டிகள், அடுத்த முறையும் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
தற்போது பிடிபட்டவர்கள் மட்டுமின்றி, வேறு யாராக இருந்தாலும், வாகன பதிவு எண் தகட்டில், தேவையற்ற எந்த ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது. அந்த தகட்டில், பதிவு எண்கள் மட்டுமே இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதில் வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆலந்துார் பகுதியில் போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில், 'ஸ்டிக்கர்' ஒட்டிய, 23 பேரிடம் தலா, 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஸ்டிக்கரும் அகற்றப்பட்டது.