மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை
மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கு ஆர்.எஸ்.எஸ்., எச்சரிக்கை
ADDED : ஜூலை 24, 2024 09:02 PM
சென்னை:'காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்.,சை தொடர்புபடுத்தி பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆர்.எஸ்.எஸ்., தென் மாநில ஊடகப்பிரிவு செயலர் ஸ்ரீராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சேரக்கூடாது என, 1966ல் அன்றைய பிரதமர் இந்திரா பிறப்பித்த உத்தரவை, மத்திய அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றது.
இதுபற்றி கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், 'காந்தியை கொலை செய்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.,' என அவதுாறு பரப்பியுள்ளார்; இது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த, 1948ல் காந்தி கொல்லப்பட்டபோது, ஆர்.எஸ்.எஸ்., மீது அபாண்டமாக பழி சுமத்தி தடை செய்யப்பட்டது. 'காந்தி கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, தடையை நீக்கியது.
காந்தி கொலையுடன் ஆர்.எஸ்.எஸ்.,சை தொடர்புபடுத்தி பேசிய காங்கிரஸ் தலைவர்கள் சீதாராம் கேசரி, அர்ஜுன் சிங், திக்விஜய் சிங் ஆகியோர் நீதிமன்றங்களில் அவதுாறு வழக்கை எதிர்கொண்டனர்.
சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தது. எனவே, ஆர்.எஸ்.எஸ்., பற்றிய கருத்தை, திண்டுக்கல் எம்.பி., திரும்ப பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

