காத்திருப்பு பட்டியலில் இருந்த ஆர்.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
காத்திருப்பு பட்டியலில் இருந்த ஆர்.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
ADDED : பிப் 22, 2025 11:44 PM
சென்னை:தமிழகத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உட்பட, 19 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம், 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 56 யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆட்கள் பற்றாக்குறையால், ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட ஆவணங்கள் வழங்க, பல நாட்கள் தாமதமாகின்றன.
இதற்கிடையே, வட்டார போக்குவரத்து அதிகாரிகளான ஆர்.டி.ஓ.,க்கள் உட்பட, 21 பேர் ஒரு மாதத்துக்கும் மேலாக, எந்த பணியும் இன்றி காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர். இதனால், மற்ற அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
அன்றாட அலுவல்களும் பாதிக்கப்பட்டுள்ளன என, கடந்த 18ம் தேதி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, உள்துறை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழக போக்குவரத்து ஆணையர் அனுப்பிய பரிந்துரை அடிப்படையில், 19 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சிதம்பரம், மதுரை, சங்கரன்கோவில், பெருந்துறை, சங்ககிரி, கோவை, வாணியம்பாடி, வேலுார், ஓசூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட 19 நகரங்களில், பணியில் இருந்த மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

