சாம்சங் விவகாரம்: முதல்வர் தலையிட மார்க்சிஸ்ட் கோரிக்கை
சாம்சங் விவகாரம்: முதல்வர் தலையிட மார்க்சிஸ்ட் கோரிக்கை
ADDED : மார் 06, 2025 01:36 AM
சென்னை: 'சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கை விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, தீர்வு காண வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை:
சாம்சாங் தொழிற்சாலையில், கடந்த ஆண்டு பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தொழிலாளர்கள் பெற்றனர். கடந்த மாதத்தில், தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக, சங்கத்தின், 3 தலைமை தொழிலாளர்களை, சாம்சாங் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.
இதை கண்டித்து, பிப்., 5 முதல், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு சுமுகத் தீர்வு காண, தொழிலாளர் நலத் துறை முன்னிலையில், 10 கட்ட பேச்சு நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டாமல் தொடர்கிறது.
வெளி ஆட்களை வைத்து சட்டவிரோத உற்பத்தியில் தொடர்ந்து ஈடுப்பட்டு, நிரந்தர தொழிலாளர்களை ஆலையை விட்டு வெளியேற்ற முயற்சித்தது. இது குறித்து, உரிய முறையில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தபோது, மேலும் 20 தொழிற்சங்க நிர்வாகிகளை, நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.
அனைத்து தொழிலாளர்களையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவும். தொழிலாளர்கள் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணவும் முதல்வர் தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.