ADDED : மே 26, 2024 12:56 AM
சென்னை:'ஜெயலலிதாவை மிகச் சிறந்த ஹிந்துத்துவா தலைவர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
* ஜெயகுமார்:
ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் ஜெயலலிதா. அனைத்து மதங்களுக்கும் பொதுவாக திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்த துடிக்கிறார். அதற்காக, ஜெயலலிதா மீது அவதுாறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தை சார்ந்த தலைவர் போல, அவரைக் காட்டி பேட்டி அளிக்கிறார். இது கடும் கண்டனத்துக்கு உரியது.
ஜெயலலிதா அனைத்து மதங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்து போற்றுவதிலும், எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி உறுதியாக இருந்தவர். அவர் குறித்து முழுமையாக எதுவும் தெரியாமல் அண்ணமலை பேசுவது சரியல்ல.
* சசிகலா:
அண்ணாமலையின் கருத்து, ஜெயலலிதா குறித்த தவறான புரிதலைத்தான் வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதா ஜாதி, மத பேதங்களைக் கடந்து, அனைத்து தரப்பினரும் மதித்து போற்றக்கூடிய தலைவியாக, தன் வாழ்நாள் முழுதும் வாழ்ந்து காட்டியவர். உண்மையான திராவிட தலைவராக, தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர். அவருக்கு தெய்வ நம்பிக்கை இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், என்றைக்கும் மத நம்பிக்கையோடு செயல்பட்டது கிடையாது. அவரது ஆட்சியில், அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதுகாப்போடு, தமிழ் மண்ணில் வாழ முடிந்தது. அவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும், யாராலும் அடைத்து விட முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.