ஒற்றை வார்த்தையில் சிக்கினார் சீமான்; நேற்று உத்தரவு; இன்று வழக்கு: நாளை என்னாகும்?
ஒற்றை வார்த்தையில் சிக்கினார் சீமான்; நேற்று உத்தரவு; இன்று வழக்கு: நாளை என்னாகும்?
UPDATED : ஆக 31, 2024 11:32 AM
ADDED : ஆக 31, 2024 11:25 AM

சென்னை: குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாக பேசிய குற்றச்சாட்டில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சர்ச்சை வார்த்தை
சர்ச்சையாகவும், அதே சமயம் கூட்டத்தை உற்சாகப்படுத்தும் வகையிலும் பேசுவதில் நாம் தமிழர் சீமானுக்கு தனி ஸ்டைல் உண்டு. அண்மையில் சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய ஒரு வார்த்தையை பயன்படுத்தி வழக்கில் சிக்கினார். அவரது கைதை கண்டித்த சீமான், அதே சொல்லை செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும் அந்த வார்த்தையை மேற்கோள் காட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. கடும் எதிர்ப்பு
சீமானின் இந்த பேச்சுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏராளமான காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்தில் அஜேஷ் என்ற வழக்கறிஞரும் புகார் ஒன்றை அளித்திருந்தார்.எஸ்.சி., எஸ்.டி., ஆணையம்
புகார் ஒரு பக்கம் இருக்க,நேற்றைய தினம் சீமான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் கமிஷனருக்கு தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் உத்தரவை பிறப்பித்தது. காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக புகார்தாரர் ராஜேஷ் அளித்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து, சீமான் மீது குறிப்பிட்ட சமுதாய மக்களை இழிவாக பேசியதாக எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.