கரூர் மாணவிக்கு கழுத்தறுப்பு; போலீஸ் அறிக்கைக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு!
கரூர் மாணவிக்கு கழுத்தறுப்பு; போலீஸ் அறிக்கைக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு!
UPDATED : பிப் 24, 2025 07:11 PM
ADDED : பிப் 24, 2025 11:10 AM

கரூர்: கரூரில் 10ம் வகுப்பு மாணவி கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், போலீசார் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்படுவதாக, மாணவியின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, 12ம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும், கழுத்தை அறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த சம்பவம் குறித்து கரூர் போலீசார் தற்போது விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மாணவியை, அதே ஊரைச் சேர்ந்த உறவினரான 17 வயது மாணவன், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியே வருமாறு கூறியுள்ளான். அங்கு வந்த மாணவியை கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தி விட்டு, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிச் சென்று விட்டான்.
மாணவனைப் பற்றி அந்த மாணவி இழிவாக பேசியதன் காரணமாக, கோபத்தில் இந்த செயலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், மாணவன் கைது செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளான்.
இப்படியிருக்கையில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் குத்தியாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தியாக வெளியிட கூடாது, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர் குற்றச்சாட்டு
ஆனால், போலீசாரின் அறிக்கையை, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மறுத்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் இல்லை என்பதற்கான அறிக்கையில் கையெழுத்து போட்டு தருமாறு போலீசார் தன்னிடம் கேட்டனர் என்றும், அதற்கு தான் மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.போலீசார், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

