PUBLISHED ON : மே 01, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
ரத்தத்தின் வகைகள்
அனைவரது ரத்தமும் ஒரே நிறம் தான். ஆனால் ஒரே வகை கிடையாது. மனித ரத்தத்தில் 10க்கு மேலான வகைகள் உள்ளன. அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் முக்கியமானவை. 1901ல் ஆஸ்திரிய விஞ்ஞானி கார்ல் லான்ட்ஸ்டெய்னர், ரத்த வகையை கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு 1930ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரத்தத்தில் உள்ள சிறிய புரதமான 'ஆன்டிஜென்'-ஐ வைத்து ரத்த வகை கண்டறியப்படுகிறது. ஒருவரது ரத்தத்தில் 'ஏ' ஆன்டிஜென் இருந்தால் 'ஏ' குரூப். 'ஏ,பி' இரண்டும் இருந்தால் 'ஏ,பி'. எதுவுமே இல்லையெனில் 'ஓ' குரூப்.
தகவல் சுரங்கம்
உலக தொழிலாளர் தினம்
உலகின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர் களின் அர்ப்பணிப்பு, உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உலக தொழிலாளர் அமைப்பு சார்பில் மே 1ல் உலக தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு '8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர துாக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது 19ம் நுாற்றாண்டில் வளர்ந்த நாடுகளில் 12 - 18 மணி நேரம் கட்டாயம் வேலை என இருந்தது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது.