கண்மூடித்தனமாக வங்கி கணக்கை முடக்கும் அதிகாரிகளுக்கு கண்டிப்பு
கண்மூடித்தனமாக வங்கி கணக்கை முடக்கும் அதிகாரிகளுக்கு கண்டிப்பு
ADDED : செப் 03, 2024 04:51 AM

சென்னை: கண்மூடித்தனமாக அதிகாரத்தை பிரயோகித்து, வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர் வங்கி கணக்கை முடக்கும் போலீஸ் அதிகாரிகளை, சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
வழக்கு பதிவு
சென்னையை சேர்ந்த ஜெயசாம்ராஜ் என்பவர், ராமாபுரம் போலீசில் அளித்த புகார் அடிப்படையில், முகமது அபுசலிஹு என்பவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பெடரல் வங்கியில் உள்ள முகமதுவின் வங்கி கணக்கை, போலீசார் முடக்கி வைத்தனர். வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் முகமது மனுத் தாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.பொன்முடி ஆஜராகி, “ஜெயசாம்ராஜுக்கும், முகமதுக்கும் இடையே பண பரிவர்த்தனை இருந்தது.
பணத்தை திருப்பி தரவில்லை என்று முகமதுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இது, நண்பர்களுக்கு இடையேயான சிவில் பரிவர்த்தனை. வங்கி கணக்கை முடக்கி வைக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை,” என்றார்.
புலன் விசாரணை
மனுவை விசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
புகாரை படிக்கும் போது, விசாரணைக்கு எடுக்கும் வகையிலான குற்றத்தை வெளிப்படுத்தவில்லை.
இருந்தும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
மனதை செலுத்தாமல், வங்கி கணக்கை முடக்கும்படி, புலனாய்வு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்து, மனுதாரருக்கும் தெரியப்படுத்தவில்லை.
மனுதாரரின் வங்கி கணக்கில் உள்ள தொகை, குற்றச்செயல் வாயிலாக வந்தது என்பதில் திருப்தி இல்லாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வங்கி கணக்கை முடக்க, போலீசாருக்கு அதிகாரம் இல்லை.
வங்கி கணக்கை முடக்கும் வகையில், கண்மூடித்தனமாக அதிகாரத்தை செயல்படுத்தும் போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
விசாரணை என்ற பெயரில், ஐந்து மாதங்களாக மனுதாரர் துன்பப்பட்டுள்ளார். எனவே, உடனடியாக முடக்கத்தை நீக்கும்படி, வங்கிக்கு, போலீஸ் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.