காந்தாரி போல கதறுகிறார் இபிஎஸ்: தி.மு.க., - எம்.பி., - அ.ராஜா பதிலடி
காந்தாரி போல கதறுகிறார் இபிஎஸ்: தி.மு.க., - எம்.பி., - அ.ராஜா பதிலடி
ADDED : ஆக 19, 2024 04:25 AM

சென்னை: தி.மு.க., துணைப் பொதுச்செயலரும், எம்.பி.,யுமான அ.ராஜா வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி நுாற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், மத்திய அரசு, 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. 'விழாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஏன் வருகிறார்; ராகுலை ஏன் அழைக்கவில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கேட்டிருக்கிறார்.
இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது மத்திய அரசு தான் என்பதால், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் பங்கேற்றதில், பழனிசாமிக்கு என்ன பிரச்னை.
கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி எழுத்து ஏன் இருக்கிறது என, பழனிசாமி கேட்டிருக்கிறார்.
இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும், அதில் ஆங்கிலமும், ஹிந்தியும் இருப்பது வழக்கம். அ.தி.மு.க.,வை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டபோது, அதில் ஹிந்தி எழுத்துக்கள் இருப்பது கூட பழனிசாமிக்கு தெரியவில்லை.
கருணாநிதிக்கு வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான், 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கருணாநிதியை மத்திய அரசே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவான அத்திக்கடவு திட்டத்தை, தி.மு.க., அரசு நிறைவேற்றி இருப்பதை பொறுக்காமல், 'காந்தாரி' போல பழனிசாமி கதறுகிறார். இவ்வாறு அ.ராஜா கூறியுள்ளார்.

