குட்கா விற்ற 17,550 கடைகளுக்கு 'சீல்' ; 33.28 கோடி ரூபாய் அபராதம் வசூல்
குட்கா விற்ற 17,550 கடைகளுக்கு 'சீல்' ; 33.28 கோடி ரூபாய் அபராதம் வசூல்
ADDED : ஆக 13, 2024 02:42 AM

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த, 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உறுதிமொழி ஏற்றார். பின், அவர் அளித்த பேட்டி:
இளைய சமுதாயத்தினரை போதை பழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சியில், முதல்வர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து, போதைபொருட்கள் விற்பனைக்கு எதிராக, உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்துக்களை தடுப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த 2021 முதல் இதுவரை 8.66 லட்சம் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32,404 கடைகளில் பான்பராக், குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
அந்த கடைகளில், 21 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.86 லட்சம் கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் விளைவாக, 17,550 கடைகள் மூடி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இதில், அபராத தொகையாக, 33.28 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.