சுய உதவி குழுவினர் 25 கிலோ 'லக்கேஜ்'; டவுன் பஸ்களில் எடுத்து செல்ல அனுமதி
சுய உதவி குழுவினர் 25 கிலோ 'லக்கேஜ்'; டவுன் பஸ்களில் எடுத்து செல்ல அனுமதி
ADDED : மார் 11, 2025 05:03 AM

சென்னை : சென்னையில், கடந்த 8ம் தேதி நடந்த உலக மகளிர் தின விழாவில், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, புதிய அடையாள அட்டைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது, 'சுய உதவிக்குழு அட்டை வைத்திருக்கும் பெண்கள், அரசு டவுன் பஸ்களில், 25 கிலோ வரை இலவசமாக தங்கள் சுமையை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர்' என்று அறிவித்தார். அதை பின்பற்றும்படி, அரசு போக்குவரத்து கழகங்கள், பஸ் கண்டக்டர்களுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளன.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு ஆணையின்படி, சாதாரண டவுன் பஸ்களில், மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டையுடன் பயணிக்கும் பெண் பயணியர், தங்களுடன் எடுத்து வரும் ஒவ்வொரு 25 கிலோ சுமைக்கும், அவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்காமல், பெண்கள் இலவசமாக பயணிக்க வழங்கப்படும் டிக்கெட்டில், கூடுதலாக ஒன்றை வழங்க வேண்டும்.
மேலும், 25 கிலோவுக்கு அதிகமாக பயணியர் சுமை எடுத்து வரும் நேரத்தில், அதற்கு ஏற்றாற் போல, இரண்டு அல்லது மூன்று பெண் பயணியருக்குரிய இலவச டிக்கெட்டை கூடுதலாக வழங்க வேண்டும்.
இந்த நடைமுறையில் எந்தவித இடர்ப்பாடுகளும் இன்றி, பெண் பயணியரிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என, கண்டக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து பணிமனைகளிலும், இதற்கான அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.