'பெட்டிக்கடைகளில் மிட்டாய் போல போதைப்பொருட்கள் விற்பனை'
'பெட்டிக்கடைகளில் மிட்டாய் போல போதைப்பொருட்கள் விற்பனை'
ADDED : ஆக 09, 2024 12:52 AM

சென்னை: 'போதைப்பொருட்கள் விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்த, காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை நங்கநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆசிரியர், அம்மாணவனின் புத்தகப் பையை சோதனை செய்துள்ளார். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்து, போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்த கஞ்சா பொட்டலங்களை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், அந்த மாணவன் வாங்கியதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறி வருவதையும், குறிப்பாக பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், பெட்டிக் கடைகளில் மிட்டாய் விற்பது போல், சர்வ சுதந்திரமாக போதைப்பொருள் விற்பனை நடந்து வருவது குறித்து, ஏற்கனவே தி.மு.க., அரசை எச்சரித்துள்ளேன்.
அடுத்த தலைமுறையை பாழாக்கும் போதைப் பொருள் விற்பனையை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய தமிழக காவல் துறையை, எதிர்க்கட்சியினரை மட்டும் பழிவாங்கும் ஏவல் துறையாக பயன்படுத்துகிறார் முதல்வர்.
எதிர்கால இளம் சந்ததியினரை, போதைப் பொருள் புழக்கத்தில் இருந்து காப்பாற்ற, வளமான தமிழகத்தை உறுதிப்படுத்த, இனியாவது போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த, காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே பிரச்னையை குறிப்பிட்டு பா.ம.க., தலைவர் அன்புமணியும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், 'பழவந்தாங்கலில் மட்டுமல்ல; தமிழகத்தின் பெரும்பான்மையான பள்ளிகளிலும் இதே நிலைதான். கஞ்சா விற்பனையை தமிழக அரசும், காவல் துறையும் வேடிக்கை பார்ப்பது மிகவும் ஆபத்தானது. இனியும் அலட்சியம் காட்டாமல், கஞ்சாவை ஒழிக்க வேண்டும்,'' என, கூறியுள்ளார்.