அடுத்த 10 ஆண்டுகளில் தற்கொலைகள் அதிகரிக்கும் சிநேகா நிறுவனர் எச்சரிக்கை..
அடுத்த 10 ஆண்டுகளில் தற்கொலைகள் அதிகரிக்கும் சிநேகா நிறுவனர் எச்சரிக்கை..
ADDED : ஏப் 26, 2024 01:43 AM

சென்னை: ''தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு, மக்களிடையே முழுதுமாக சென்றடையவில்லை. தற்கொலையை அவமான சின்னமாகக் கருதி, இதுபற்றி யாரும் பேசுவது கிடையாது,'' என, சிநேகா தற்கொலை தடுப்பு அமைப்பு நிறுவனர் லட்சுமி விஜயகுமார் கூறினார்.
தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிலிருந்து மீளவும், சிநேகா தற்கொலை தடுப்பு அமைப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிநேகா தற்கொலை தடுப்பு அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் மற்றும் அதன் இயக்குனர் ஆனந்த், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, நேற்று நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது, லட்சுமி விஜயகுமார் கூறியதாவது:
தமிழகத்தில், சில ஆண்டுகளாக தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின், 2022ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி 1.7 லட்சம் பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.
ஒரு நாளைக்கு, 450 பேர் இந்தியாவில் தற்கொலை செய்கின்றனர். தமிழகத்தின் தற்கொலை விகிதம் 1,000த்திற்கு, 18.5 மற்றும் 25.9 சதவீதமாக இருக்கிறது.
ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால், ஏழு பேர் நேரடியாகவோ, மறைமுகமாவோ பாதிக்கப்படுகின்றனர்.
ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய மனம் இல்லாதது, அதிக எதிர்பார்ப்புகள், தற்கொலை எண்ணங்கள் தோன்றும் போது, உதவி கேட்க தயங்கு வது போன்ற காரணங்களால், தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து உள்ளன. மக்களிடையே தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முழுதுமாக சென்றடையவில்லை.
தற்கொலையை அவமான சின்னமாகக் கருதி, இது பற்றி யாரும் பேசுவது கிடையாது. தற்கொலை தடுப்பு விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அரசு புதிய சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
இன்றைய வாலிபர்கள் பலரும் மனச்சோர்வு என்ற அடிப்படையில், அவர்களுக்குள்ளேயே பலவீனமாக உணரத் துவங்கி விட்டனர்.
இந்த எண்ணம் நாளடைவில் தற்கொலை செய்யத் துாண்டுகிறது. சினிமாவிலும் கஷ்டம் என்ற நிலை வந்தால், தற்கொலை தான் தீர்வு என்பதை போன்ற காட்சிகளை சுட்டிக் காட்டுகின்றனர். இது, தவறான உதாரணமாக மக்களிடத்தில் பிரதிபலிக்கிறது.
நாட்டில் இதே போன்ற நிலை நீடித்தால் அடுத்த, 10 ஆண்டுகளில் தற்கொலைகள் எண்ணிக்கை அதிகமாகும். தற்கொலை செய்பவர்களில், 35 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதில், பலருக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது.
தவிர சமூக வலைதளங்கள், ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் அடிமையாகி பலர் தவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

