கோவை மேயர் வேட்பாளராக கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிப்பு சீனியர்கள் 'அப்செட்'; மண்டல தலைவர் அழுகை
கோவை மேயர் வேட்பாளராக கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிப்பு சீனியர்கள் 'அப்செட்'; மண்டல தலைவர் அழுகை
ADDED : ஆக 05, 2024 09:37 PM

கோவை:கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக, தி.மு.க.,வை சேர்ந்த, 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை எதிர்பார்த்த சீனியர் கவுன்சிலர்கள் 'அப்செட்' ஆகினர். மண்டபத்தில் இருந்து வெளியேறிய மண்டல தலைவர் மீனா, காரில் அழுதுகொண்டே சென்றார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த, தி.மு.க.,வை சேர்ந்த, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயருக்கான மறைமுகத் தேர்தல், இன்று நடக்கிறது. மாநகராட்சியில், 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், 73 பேர் தி.மு.க., கவுன்சிலர்கள்; இவர்களில், 33 பேர் பெண்கள். மேயர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், 33 பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அறிவித்தார் அமைச்சர் நேரு
இப்பதவியை கைப்பற்ற சீனியர் கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர், இம்முறை தேர்வான கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்தனர். சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளரான, 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியின் பெயர், எம்.பி., ராஜ்குமார் மூலமாக பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், மேயர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் கூட்டம், கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள மண்டபத்தில் நேற்று நடந்தது. முன்னாள் மேயர் கல்பனா உட்பட சில கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வரவில்லை.
கூட்டத்தில் கட்சி தலைமையின் கடிதத்தை, அமைச்சர் நேரு படித்தார். மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டதும், முன்வரிசைக்கு அவரை வரவழைத்து, இருக்கையில் அமர வைத்தனர். ரங்கநாயகிக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ரங்கநாயகி பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவரது கணவர் ராமச்சந்திரன், 29வது வார்டு தி.மு.க., வட்ட செயலர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சீனியர்கள் 'அப்செட்'
மேயர் வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்படும் என, காத்திருந்த சீனியர் கவுன்சிலர்கள் ஏமாற்றத்தால் 'அப்செட்' ஆகினர். மத்திய மண்டல தலைவர் மீனா, மேயர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில், மண்டபத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறியதும், கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். இதேபோல், பலரும் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.